கன்னியாகுமரி கடலில் குகன் படகு வெள்ளோட்டம்
கன்னியாகுமரியில் பழுதடைந்த குகன் படகு சரி செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மIண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.