பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட கை பம்புகள்
பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட கை பம்புகள்
Update: 2024-04-23 16:14 GMT
கிராம ஊராட்சிப் பகுதிகள், முக்கிய ஊரக உள்ளாட்சியாக உள்ளன. இப்பகுதிகளில், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ், தற்போது வீடுதோறும் குடிநீர் இணைப்பு அளித்து, துாய குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், பொது இடங்களில் சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள், சிறு மின்விசை குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை அமைத்தும், குடிநீர் பெறப்படுகிறது. இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும் முன், குடிநீர் தேவைக்கு, குறிப்பிட்ட இடங்களில், இந்தியா மார்க் என்ற கை பம்பு கள் அமைக்கப்பட்டன. அவை, பல ஆண்டுகளாக பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பயன்பட்டன. தற்காலத்தில், அவற்றை முறையாக பராமரிக்கவில்லை. சாலை மட்டம் உயர்ந்து, அவை மிகவும் பள்ளத்தில் தாழ்ந்து, பயன்படுத்தவே இயலாமல் சீரழிகின்றன. திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் உள்ள, 54 ஊராட்சிப் பகுதிகளில், அவ்வாறு அமைக்கப்பட்டவை, பெரும்பாலும் சீரழிந்து காட்சிப்பொருளாகவே உள்ளன. கோடை வறட்சி, மின் தடை உள்ளிட்ட நேரங்களில், கை பம்பில் எந்நேரமும் குடிநீர் பெறலாம். அவற்றின் அவசியம் கருதி, பராமரித்து மீண்டும் பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.