மனைவியைத் துன்புறுத்தி வரதட்சணை -கணவருக்கு 7 ஆண்டு சிறை
கரூர் அருகே வரதட்சனை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2000- அபராதமும் விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.;
Update: 2023-11-01 05:58 GMT
பிரகாஷ் குமார்
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதியில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி. தாமரைசெல்வி. இவர்களது இளைய மகன் பிரகாஷ் குமார்க்கு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சாம்பள்ளி தாலுகா, சாதிய நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பிரகாஷ் மற்றும் அவருடைய அம்மா தாமரை செல்வி, அப்பா பாலசுப்ரமணி, அண்ணன் பிரவீன் குமார் ஆகியோர் மேற்படி பவித்ராவை வரதட்சணை கேட்டு ஓரு வருடமாக கொடுமைப்படுத்தியதால், நால்வரின் கொடுமை தாங்க முடியாமல் 2020 நவம்பர் 22ஆம் தேதி தூக்குமாட்டி பவித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, பவித்ராவின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் இன்று கரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி, பிரகாஷ் குமாரை குற்றவாளி என தீர்ப்பளித்தார். பிரகாஷ் குமாருக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை, மற்றும் ரூபாய் 2,000- அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால்,மேலும், ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து அவரை திருச்சி சிறைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.