வெப்ப அலை தாக்கம் - ஆட்சியர் அறிவுரை
குழந்தைகளை நிறுத்தப்பட்ட வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும், வெப்ப அலை தாக்கத்திருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுரை வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இயல்பான வெப்ப அலையைக் காட்டிலும் கோடைக்காலத்தில் (மே 2024 முதல் ஜூன் 2024 வரை) கூடுதலாக வெப்ப அலையின் தாக்கம் இருக்கக்கூடும் என இந்திய வானியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கீழ்க்காணும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். வெப்ப அலைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை :- வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் மூலமாக உள்ளுர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். மேலும், வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும் போது கடினமான செயல்களைத் தவிர்த்திடவும், மதியம் 12. மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் பணி புரிவதை தவிர்த்திடவும் வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்லும் நேர்வில் மெல்லிய, வெளிர்நிற, தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடைகளை அணிந்து செல்லவும், கண்ணாடி, குடை, தொப்பி, மற்றும் காலணி ஆகியவற்றை அணிந்து செல்லவேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான இடைவெளியில் அடிக்கடி குடிநீர் பருகிட வேண்டும்.
ORS (Oral Rehydration Solution) எனப்படும் உப்புச்சர்க்கரை கரைசல், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்சி, சாத நீர், எலுமிச்சை நீர் போன்ற பானங்களைப் பருகி நீர்ச்சத்து இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பயணத்தின்போது தேவையான அளவு குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகுவதை தவிர்த்திடவேண்டும். இது உடலை நீர்ச்சத்து இழப்பிலிருந்து பாதுகாத்திட உதவும். புரதச்சத்து அதிகம் உள்ள உணவு மற்றும் பழைய கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். திறந்தவெளியில் பணிபுரியும்போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தலை, கழுத்து, முகம், கை மற்றும் கால்களில் ஈரத் துணியைப் பயன்படுத்தி வெப்பத்தாக்கத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். மயக்கமோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும். வீட்டை குளுமையாக வைத்திருக்க திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை இரவில் திறந்து வைத்திருக்க வேண்டும்.
மின்விசிறி பயன்படுத்தியும், ஈரமான ஆடைகள் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள குழந்தைகளை நிறுத்தப்பட்ட வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியில் செல்லக்கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்ப தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். முதியவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும், குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவெளியில் குடிநீர் அருந்துவதை உறுதி செய்திட வேண்டும். கால்நடைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரைகள் அமைத்து போதிய வசதி செய்து கொடுக்க வேண்டும். அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் போதுமான தண்ணீர் வழங்க வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது" என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.