ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அக்னி நட்சத்திரமானது பகல் நேரத்தில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெயில் சுட்டெரித்தாலும் கடந்த 5 தினங்களாக மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதுடன் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. கடந்த 5 தினங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி மற்றும் வன்னியம்பட்டி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது தொடர்ந்து சாரல் மழையும் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருவதால் வெப்பம் முற்றிலும் தணிந்து நகர் பகுதி எங்கும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.