குமரியில் இன்று கனமழை எச்சரிக்கை - கடல் அலைக்கும் வாய்ப்பு
குமரியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கடல் பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
திற்பரப்பு அருவியில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதில் மலையோர பகுதிகள் அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக பேச்சிப்பாறை, திற்பரப்பு உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதில் நேற்று வரை அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 103.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 421 கனஅடி தண்ணீர் நதிறந்து விடப்பட்டுள்ளது. மேலும் 500 கன அடி தண்ணீர் மறுகாலில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் பெய்து வருகின்ற மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று குமரிக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. மேலும் கடல் பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.