குமரியில் கனமழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்பு 

குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் பாதிப்படைந்துள்ளது. தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ரப்பர் தோட்டங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2024-06-09 06:57 GMT

ரப்பர் தோட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதியில் உள்ள ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில்  தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.    

  குறிப்பாக மலை கிராமங்களான கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாகவே இடியுடன் கூடிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக காளிகேசம்,  கீரிப்பாறை, மாறாமலை, வாழயத்துவயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் இன்றும்  ரப்பர் பால் வெட்டும் தொழில் நடைபெறவில்லை. இதன் காரணமாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் அரசு ரப்பர் கழகத் தோட்டங்கள், தனியார் ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் வேலைக்கு  செல்லாத காரணத்தால்  தோட்டங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு, தொழிலாளர்களும் வேலை இன்றி உள்ளனர்.

Tags:    

Similar News