குமரியில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து 2000 கன அடி நெருங்குகிறது
குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து 2000 கன அடியை நெருங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளிலும் மளமளவென நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் வேகமாக நிரம்பி உள்ளன. இன்றும் 6-ம் நாளாக மாவட்ட முழுதும் பலத்த மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அணைக்கும் நீர்வரத்து உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 75.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு சுமார் 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்றைய பலத்த மழை காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2000 கன அடியை நெருங்கி வருவதால் அணையில் இருந்து நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 532 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ள நிலையில் உபரிநீராக மறுகல் வழியாக 1007 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 1539 கன அடி தண்ணீர் பேச்சு போட்டி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. மறு காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குளிக்கவோ, ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.