பாதுகாப்பில்லாமல் இயக்கப்படும் குவாரி வாகனங்கள் -வாகன ஓட்டிகள் அச்சம்
Update: 2023-11-21 05:01 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகரல் மற்றும் ஆர்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தனியார் கல் அரவை தொழிற்சாலை இயங்குகின்றன. இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் செயல்படுகின்றன. இப்பகுதிகளில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தினமும் ஏராளமான லோடு வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், ஒரு சில வாகனங்கள் தவிர்த்து பெரும்பாலான கனரக வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன. இதனால், மண் துகள்கள் காற்றில் பறந்து பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும், கனரக வாகனங்களில் இருந்து பறக்கின்ற மண், எம்-சாண்ட் போன்றவை சாலைகளில் படிந்து புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, தொழிற்சாலைகளில் லோடு ஏற்றி செல்லும் லாரிகளில், தார்ப்பாய் போர்த்தி இயக்கவும் தார்ப்பாய் போர்த்தாத லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.