தடையை மீறும் கனரக வாகனங்கள் - விஜய்வசந்த் எம்.பி. எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடையை மீறி சாலையில் செல்லும் கனரக வாகனங்களை காங்கிரஸ் கட்சியினா் சிறை பிடிப்பாா்கள் என்று விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.
விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக வாகனங்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிா்பலி ஏற்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள்அச்சத்துடன் பயணிக்கும் சூழ்நிலை உள்ளது. இதை தவிா்க்கும் வகையில், கனரக வாகனங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என நான் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன்.
இதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்டத்தில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல குறிப்பிட்ட நேரம் அனுமதித்துள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் கடந்த சில நாள்களாக அந்தத் தடையை மீறி கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் சாலையில் இயங்குவது தெரிய வந்துள்ளது. காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடியாக இதனை கண்காணித்து இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கனரக வாகனங்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க தவறினால் காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களை சிறை பிடிப்பாா்கள் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.