போலீசாரை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருவட்டாரில் அனுமதியின்றி இந்து அமைப்பினர் 170 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் இந்து கோவில் அருகே உள்ள மைதானத்தில் மகாத்மா இளைஞர் மன்றத்தினர் விளையாடி வந்தனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கும் மகாத்மா இளைஞர் மன்றத்தினருக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த திருவட்டாறு தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கடந்த வாரம் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 12 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து இந்து முன்னணி, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள், மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஏராளம் பேர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக 170 மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.