1,150 கிலோ பொது ரேஷன் அரிசி பதுக்கல்: ஒருவர் கைது
தஞ்சாவூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,150 கிலோ பொது வினியோகத் திட்ட அரிசியைக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைப்பற்றி, ஒருவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பகுதியில், பொது வினியோகத் திட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் பிரசன்னா உள்ளிட்டோர் வடக்கு அலங்கம் பகுதியிலுள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர். அப்போது, 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் 1,150 கிலோ பொது வினியோகத் திட்ட அரிசி பதுக்கி வைப்பட்டிருப்பது தெரிய வந்தது. கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல் ஆகிய பகுதிகளில் மக்களிடமிருந்து அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி இட்லி மாவு அரைப்பதற்கும், மீன் பண்ணைக்கும் அதிக விலையில் விற்கப்படுவது தெரிய வந்தது. இது தொடர்பாக வடக்கு அலங்கத்தைச் சேர்ந்த எம். ராஜேந்திரனை (48) காவல் துறையினர் கைது செய்தனர்.