தின்னர் ஊற்றி மனைவி கொலை கணவன் கைது
சேலம் கேம்ப் காந்தி நகரில் குடும்ப தகராற்றால் மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள சேலம் கேம்ப் காந்தி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50), பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (37). இவர்கள் இருவரும் இரண்டாவதாக கடந்த 17 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், தமிழரசி உடலில் தின்னரை ஊற்றிக் கொண்டுள்ளார். பிறகு சிறிது நேரத்தில் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் தமிழரசி அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சென்று, அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் குமரன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். தமிழரசியிடமும் விசாரித்தனர். அப்போது மரண வாக்குமூலத்தை சேலம் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் பெற்றார். அந்த வாக்குமூலத்தில், தான் உடலில் தின்னரை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். அப்போது பிள்ளைகளின் ஞாபகம் வந்து தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள சென்றேன். அந்த நேரத்தில் தனது கணவர், என் மீது தீயை பற்ற வைத்து போட்டுவிட்டார், எனக்கூறியிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, தமிழரசி உயிரிழந்தார். இதனையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.