கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்துவேன் - மரிய ஜெனிபர்
நான் எம் பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கன்னியாகுமரியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவேன் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மரிய ஜெனிபர் நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு பின்பு பேட்டியளித்தார். பேட்டின் போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறைகள் நமக்கு கண்கூடாக தெரிகிறது. இதனை தட்டிக் கேட்க வேண்டிய அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் செயல்படாத காரணத்தினால் தமிழ் தேசிய அரசியலை நிறுவ வேண்டும். மண்ணின் மக்களுக்கான அரசியலை ஏற்படுத்த வேண்டும் என்ற பயணத்தில் அரசியலை சந்திக்கிறோம். மக்கள் முன் சென்று நிற்கிறோம். அவர்கள் வரவேற்கின்றனர்.
நான் எம் பி ஆனால் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவேன். மலைகள் உடைத்து பக்கத்து மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இயற்கை சீரழிவால் மாவட்டம் முழுவதும் வெப்பமடைந்துள்ளது. தேசிய கட்சிகளும் திராவிட கட்சிகளும் மக்களை வாக்கு வங்கியாகத்தான் பார்க்கின்றனர். வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கான அரசியலை அவர்கள் செய்யவில்லை. அதிகாரம், அரசியல், அரசு ஆகியவை அவர்களுக்காகத்தான் செயல்படுகிறார்கள்.
வாக்குகளுக்காக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எங்கள் கட்சி. மக்களுக்காகவும் இனத்திற்காகவும் மண்ணுக்காகவும் தூய எண்ணத்தோடு நடத்தும் கட்சி எங்கள் கட்சி. அதனால் யாருடனும் கூட்டணி சேர்ந்து பயணிக்க முடியாது. ஜனவரி கடைசியில் இருந்தே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டோம். திண்ணை பிரச்சாரம், குழுக்களை சந்தித்து பேசுவது என மக்களோடு மக்களாக இருந்து நெருங்கி பழக இருக்கிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தான் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கிறது. எனவே மக்கள் யோசித்து தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.