தேர்தல் நடத்தை விதிகள் அமல் : ஆட்சியர் பிருந்தாதேவி அறிவிப்பு

சேலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அண்ணா பூங்காவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடி மறைத்தனர்.

Update: 2024-03-17 07:10 GMT

சிலைகளை மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. 28-ந் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற 30-ந் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உடனடியாக நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தேர்தல் கட்டுப்பாட்டு அறை சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 1,249 வாக்குச்சாவடி மையங்களில் 3,257 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் 33 பறக்கும் படைகளும், 33 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 11 வீடியோ பார்வை குழுக்களும், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்களும். 3 ஊடக சான்றிதழ் காண்காணிப்பு குழுக்களும், 11 கணக்கு சரிபார்ப்பு குழுக்களும் மற்றும் 1 தினசரி அறிக்கை சமர்ப்பிக்கும் குழு ஆகிய 7 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்கள். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் அண்ணா பூங்காவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை மாநகராட்சி ஊழியர்கள் மூடி மறைத்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளும் மூடி மறைக்கப்பட்டன. மேலும் சுவர்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களும் கிழித்து அழிக்கப்பட்டன.

Tags:    

Similar News