அலுவல் மொழி அமலாக்கம் - சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு விருது
அலுவல் மொழி அமலாக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் மற்றும் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா விருதுகளை வழங்கினார்.
Update: 2024-02-01 04:29 GMT
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் 55-வது நகர அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் பி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அலுவல் மொழி அமலாக்கம் தொடர்பாக மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தி வாரத்தை முன்னிட்டு கட்டுரை, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட அலுவலகங்கள் பிரிவில் அலுவல் மொழி அமலாக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் மற்றும் சேலத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.