ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில், வீணாகி வரும் பறிமுதல் வாகனங்களை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-02-18 07:03 GMT

பறிமுதல் வாகனங்கள் 

ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகளின் போது போலீசாரால் அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய வளாகத்திலும், காவல் நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக வெயில், மழையில் மக்கி வீணாகி வருகின்றன. மண்ணோடு மண்ணாக துருப்பிடிக்கும் வாகனங்களால், அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Advertisement

அதே வளாகத்தில் ஸ்ரீபெரும்புதுார் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால், புகார் அளிக்க வருவோர் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்களால், சென்னை - - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. பறிமுதல் செய்யபடும் வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாவதுடன், ஏலம் விடுவதன் வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது. எனவே, துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News