திருவள்ளூர் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள் !
திருவள்ளூர் காவல் நிலையத்தில் உள்ள பறிமுதல் வாகனங்களை, உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-14 07:03 GMT
திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மணல் கடத்தல், வழிப்பறி, விபத்து போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோரின் இருசக்கர வாகனங்கள், கார், லாரி மற்றும் சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதில், இருசக்கர வாகனங்களே அதிக அளவில் உள்ளன. இவை, பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், துருப்பிடித்து வீணாகி வருகின்றன. மேலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறையாக பராமரித்து, வழக்குகள் முடிந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும். ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு மிகவும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எனவே, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் உள்ள பறிமுதல் வாகனங்களை, உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.