கரூரில், முதன் முதலாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்காக ட்ரோன்கள்

கரூரில்,முதன் முதலாக விவசாயிகள் பயன்பாட்டிற்க்காக ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-27 15:52 GMT

கிராமப்புறங்களில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும், கிராம பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்துவதால், தனிநபர் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதியுற்று வருகின்றனர். அண்மைக்காலமாக விவசாய பணிகளில் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் சிக்கலான பணியாக பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணி இருந்து வந்தது. அதற்கும் தற்போது ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் பரவலாக துவங்கி உள்ளது.

இத்தகைய பயன்பாடு கரூர் மாவட்டத்திலும் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்து,கூட்டுறவு துறை மூலம் தக்க்ஷா என்ற நிறுவனத்தின் மூலம் மூன்று ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களின் செயல்பாடு குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பதற்காக காண்பிக்கப்பட்ட இந்த செயல் விளக்க நிகழ்ச்சியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விரைவில் கரூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து கரூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவிக்கும்போது, கரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதி மேம்பாடு திட்டத்தின் கீழ், மூன்று ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை, இனுங்கூர், கள்ளை, சிந்தலவாடி ஆகிய வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அளிக்கப்படும் எனவும், ட்ரோன்களை இயக்க ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News