குமரியில் வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

குமரியில் வருவாய் துறை ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-22 10:23 GMT
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் துறையினர் தொடர் காத்திருப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதில் குமரி மாவட்டத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.          

துணை தாசில்தார்  பட்டியல் திருத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு மற்றும் பட்டதாரி அல்லாதவரின் பதவி உயர்வை உத்திரவாதப்படுத்தி அரசாணை உடனே வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.      

அதன் ஒரு பகுதியாக கடந்த 13ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. அடுத்த கட்டமாக நேற்று அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.         

குமரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தனர். தாலுகா அலுவலகங்கள்  உட்பட மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் சுமார் 350 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.      

இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 27ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News