"மக்களுடன் முதல்வர்" திட்டம் துவக்கம் - மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை செயல்படுத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளளார் அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 8 முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் 4 முகாம்களும், மற்றும் ஒரு பேரூராட்சிக்கு 1 முகாம் என்ற அடிப்படையில் 4 பேரூராட்சிகளிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. "மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் 45 வகையான கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று "மக்களுடன் முதல்வர்" Portal-ல் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். மனுக்களை பதிவதற்கு இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் ஆகியவற்றை முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும். முகாம் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 03.00 மணி வரை நடைபெற வேண்டும் . ஒவ்வொரு முகாமிற்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தங்கள் துறை சார்ந்த பதிவு செய்யப்பட்ட மனுக்களை நேரிடையாக பெற்று உரிய விளக்கம் அளித்து 15 நாட்களுக்குள் மனுவின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையினை முடிவு செய்ய வேண்டும். தங்கள் துறையின் மூலமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனில் தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கணினியில் பதிவேற்றம் செய்து மனுதாரர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவேண்டும். முகாம் நடைபெறும் இடத்தில் இ-சேவை மையம் செயல்படுத்துதல் வேண்டும். பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதுவதற்கு தன்னார்வலர்கள் 4 நபர்கள் நியமிக்கவேண்டும். முகாம் நடைபெறும் இடம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வந்து செல்வதற்கு ஏதுவான இடமாக இருக்க வேண்டும் மற்றும் மனுதாரர்கள் அனைவரும் அமர்வதற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் சரியான வகையில் மேற்கொண்டு இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.