திருக்கழுக்குன்றம் குடிநீர் திட்டம் துவக்கம்
திருக்கழுக்குன்றம் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிப் பகுதியில், 18 வார்டுகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 30, 000 பேர். தற்போது வளர்ச்சியடைந்துள்ள சூழலில், 50, 000 பேர் வசிக்கின்றனர். தினசரி, ஒரு நபருக்கு 70 லிட்டர் வீதம், 21 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆனாலும், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, அடுத்த 20 ஆண்டுகளில் குடிநீர் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பிருப்பதால், குடிநீர் நீராதார பெருக்கம், வினியோகம் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டத்திற்கு, பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, தினசரி நபர் ஒருவருக்கு, 135 லிட்டர் வீதம், 41 லட்சம் வீதம் வழங்கலாம்.
இதுகுறித்து, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு, 2023 - 24 அம்ருத் 2. 0 திட்டத்தின்கீழ், 29. 95 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்ட ஒப்பந்தம் தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி, நெம்மேலி கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தையும் துவக்கி வைத்தார்.