விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக பூங்கா திறப்பு
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பூங்காவினை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ;.2.5 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு பூங்காவுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நடைபயிற்சி பூங்காவினை மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எம்பி., ரவிக்குமார்,விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, விழுப்புரம் எம்எல்ஏ இலட்சுமணன் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயிற்சி பூங்காவில் நாள்தோறும் பொதுமக்கள், வயதானவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நடைபயிற்சி பூங்காவினை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பூங்காவினை மேலும் தரம் உயர்த்தி மேம்படுத்திட வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நடைபயிற்சி பூங்காவினை மேம்படுத்திடும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார்கள்.
இந்நடைபயிற்சி பூங்காவில், சிறுவர்கள் விளையாடும் வகையில், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, நீருற்று, கைப்பூந்து, இறகு பந்து, சருக்கு விளையாட்டு, பேட் மிண்டன் போன்ற விளையாட்டிற்கான மைதானங்களும், தியான அறை, இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் உடல் திறனை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்,வ் நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம், சிறிய அளவிலான சிற்றுண்டி உணவகம், சுகாதாரமான குடிநீர் வசதி, நவீன கழிப்பறை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கோலியனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சிதாநந்தம், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், நகராட்சி ஆணையர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.