திருச்செங்கோட்டில் வருமான வரி சோதனை
திருச்செங்கோட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-04-06 01:14 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவர் வீட்டில் தேர்தலுக்கு பணம் கொடுக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உமாவுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வருமான வரித்துறைக்கு தனசேகர் வீட்டில் சோதனை இட பரிந்துரை செய்தார். திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 12க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் அவரது வீடு அலுவலகம் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் கோடிக் க் கணக்கான ரூபாய் அளவிற்கு பணம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் நிறைவில் தான் எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பது தெரிய வரும். இந்த தனசேகர் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் நிர்வாகியாக உள்ளார் என்பதும், இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் உறவினர் என்பதும், குறிப்பிடத்தக்கது. எட்டிமடை புதூரில் தொழிலதிபர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.