திருட்டு சம்பவம் அதிகரிப்பு,போலீசார் ரோந்து பணி செல்ல வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் பல பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதால்,போலீசார் ரோந்து பணி செல்ல பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2024-05-18 12:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதால்,போலீசார் ரோந்து பணி செல்ல பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


செங்கல்பட்டு நகரத்தின் மையப்பகுதியில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், அதனை ஒட்டி உள்ள கிராமப்புறங்களுக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் செங்கல்பட்டு வந்து, அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, வங்கிகள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட தங்களின் அடிப்படை தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். நேரடி பேருந்து இல்லாத கிராமப்புற மக்கள், செங்கல்பட்டு வந்து இங்கிருந்து மாற்று பேருந்து வாயிலாக, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அடிக்கடி பிக் பாக்கெட், திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, தனியாக வரும் மூதாட்டிகளை குறி வைத்து, அவர்கள் கழுத்தில் உள்ள நகைகளை அறுத்துச் செல்வதாக, பயணியர் தெரிவிக்கின்றனர். அதே போல, கூட்டமாக உள்ள பேருந்துகளில், மொபைல் போன் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. கடந்த வாரம், ஒரே நாளில் காலையில் வாலிபரிடம் 5,000 ரூபாய் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது. மாலையில், பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டியிடம், 3 சவரன் தங்க செயின் திருடப்பட்டது.எனவே, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் முழுதும், அடிக்கடி போலீசார் ரோந்து செல்லவும், கூட்டமாக உள்ள பேருந்துகளில், பெண்களுக்கு பாதுகாப்புக்காக மகளிர் போலீசார் ரோந்து செல்லவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News