பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. கலெக்டர் ஆய்வு
Update: 2023-11-12 08:04 GMT
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்துவரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. நாகர்கோவில், கன்னிமார், குழித்துறை பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்பதால் கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் அணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார். அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும்போது கரையோர பகுதி மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அறிவுறுத்தினார்.