திருப்பூர்: மாணவர் வருகையை அதிகரிக்க வேண்டும்

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-01 03:38 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருப்பூர், வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டுமென, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் திருப்பூர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

 திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வருகின்ற (01.03.2024) முதல் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப்பள்ளிகளில் சேர்த்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் அரசுப்பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதால் வழங்கப்படும் முன்னுரிமை மற்றும் அரசு வழங்கிடும் பல்வேறு நலத்திட்ட விவரங்கள். அரசுப்பள்ளியில் மாணவர்கள் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பொதுமக்களை சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிடவசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவக்கப்பட்டுள்ள ஆங்கில வழிப்பிரிவுகள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, பள்ளி, ஊராட்சி, வட்டம் மற்றும் மாவட்ட அளவிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசுப்பள்ளியில் 1 முதல் 12 -ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை. பெண் கல்வி இடை நிற்றலை தவிர்க்க அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், புத்தகப்பை, பேருந்து பயண அட்டை, பல்வேறு வகையான ஊக்கத்தொகை உள்ளிட்ட அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை அனைவரும் தெரிந்து கெள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாதிரிப்பள்ளிகள், தகைசால் பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விரிவான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் செயல்பாடுகள் பற்றியும், தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழிக்கல்வி பாடம் கற்பித்தல் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளின் பயிலும் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளாக கல்விச்சுற்றுலா, தற்காப்பு கலைப்பயிற்சி, இலக்கிய மன்றம், கலைத் திருவிழா , வினாடி வினாப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.

எனவே, 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அனைத்து துறை அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள்., ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றி அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டுமென்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்,   போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா,  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,  திருப்பூர் சப்&கலெக்டர் சௌம்யா ஆனந்த்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, மாநகர  போலீஸ் துணை கமிஷனர்கள் ராஜராஜன்,  வனிதா, மாவட்ட  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் அரசுன் (தாராபுரம்), ஜஸ்வந்த் கண்ணன் (உடுமலைப்பேட்டை) மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News