இந்தியா கூட்டணியினர் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்
திருச்செங்கோட்டில் இந்தியா கூட்டணியினர் பேரணியாக சென்று இறுதி கட்ட பரப்புரையை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. திமுக, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தமிழ் புலிகள், மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
சி ஹெச் பி காலனி தொடங்கி வேலூர் ரோடு, தெற்கு ரத வீதி, ஆறுமுகசாமி கோவில், வழியாக நாமக்கல் பிரிவு சாலை, சேலம் பிரிவு சாலை, வழியாக புதிய பேருந்து நிலையம் வரை வந்த பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு இருந்த கூட்டத்தில் 20 நாட்களாக தேர்தல் பணியாற்றிய அனைத்து இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திமுக இதுவரையில் திருச்செங்கோடு நகருக்கு செய்த நன்மைகள் ஏராளம். முதல்வர் கொண்டு வந்துள்ள திட்டங்களால் தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சி கிடைத்துள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய திமுக நகர செயலாளர் கார்த்திகேயன் இனி வரும் இரண்டு நாட்களில் தான் இத்தனை நாட்களாக உழைத்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும், இன்றுடன் வேலை முடிந்து விட்டதாக விட்டுவிட்டால், நாம் விதைத்த நெல்லை நாமே அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகி விடும் எனவே வரும் நாட்களில் தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் கூட்டமாக இருந்து நண்பர்கள் உறவினர்கள் என்று சொல்லி மக்களிடம் எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் கூறும்போது... 20 நாட்களாக உழைத்தது போதும் என்று ஓய்வு எடுக்க சென்று விடாமல் இருக்கும் இரண்டு நாட்களில் தீவிர கட்சி பணியாற்றி உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய ஈஸ்வரன் இது ஒரு இரண்டாவது சுதந்திர போர் மோடி என்ற கொடிய ஆட்சியாலரிடமிருந்து விடுதலை பெறவேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழக முதல்வர் தந்த திட்டங்களுக்கு கொங்கு மக்கள் எப்போதும் நன்றியுள்ளவர்கள் என நிரூபிக்க இந்த தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் முதல்வர் உற்சாகமாகி ஆயிரம் உரிமைத் தொகையை 2 ஆயிரம் ஆக்கும் வாய்ப்பு உருவாகும், பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசமாக கிடைப்பது போல் ஆண்களுக்கும் கிடைக்கும் நிலை உருவாகும் எனக்கூறி பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்த பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.