நடிகை குஷ்புவை கைது செய்ய கோரி இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-15 06:42 GMT
விழுப்புரம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி மனைவியும், திரைப்பட நடிகையுமான குஷ்பு, அவரது எக்ஸ் சமூகவலைதளத்தில் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்கிற கருத்தை சாதிய வன்மத்தோடு பட்டியல் சமூக மக்களின் மொழியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளதை கண்டித்தும், குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தியும், இனிவரும் காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் சுந்தர் சி, அவருடைய மனைவி குஷ்பு ஆகிய இருவருடைய திரைப்படங்களையும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெய ஸ்டாலின், மாவட்ட அமைப்பு செயலாளர் மருது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்லா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் க.மங்காபிள்ளை கண்டன உரையாற்றினார்.