அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர்-வார்டு உறுப்பினர்கள் போராட்டம்
திமுக கட்சி உறுப்பினர்கள் தாசில்தார் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-01-06 10:26 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 21 வார்டுகளை உள்ளடக்கிய கோட்டூர் பேரூராட்சியில் 50,000கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மட்டும் சராசரியாக தினசரி ஏழு டன் கழிவுகள் பேரூராட்சி மூலம் அகற்றப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு கோட்டூர் பேரூராட்சிக்கு 3.8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, கழிவுகளை கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. கழிவுகள் கொட்ட ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள தனி நபர் அரசு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமித்ததால் நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில் அரசு ஒதுக்கீடு செய்த இடம் அளவீடு செய்யப்பட்டது. ஆனால் மதியம் 2 மணிக்கு மேல் குறிப்பிட்ட நிலத்தை அளவீடு செய்த சர்வேயர் ஒரு தலை பட்சமாக செயல்பட்டதாகவும் இடத்தை சுற்றி அரசு சார்பில் நில அளவை கற்கள் பதிக்கப்பட்டதை தனிநபர் எடுத்து அரசு உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி ஆனைமலை தாசில்தார் அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் ரேணுகா தேவியிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தாசில்தார் ரேணுகாதேவி நில அளவு குறித்து நேரடியாக ஆய்வு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை வார்டு உறுப்பினர்கள் கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வார்டு உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதுடன் தமிழக முதல்வரிடம் மனு அளிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். திமுக கட்சி உறுப்பினர்கள் தாசில்தார் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.