காஞ்சிபுரம் வட்டாரத்தில் செங்கல் உற்பத்தி துவக்கம்
காஞ்சிபுரம் வட்டாரத்தில் செங்கல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் மேட்டுகுப்பம், கீழம்பி, கூத்திரமேடு, மேல் ஒட்டிவாக்கம், முசரவாக்கம், கீழ்கதிர்பூர், திருப்புட்குழி உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. வடகிழக்கு பருவமழை காரணமாக சூளைகளில் இரு மாதங்களாக செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், தொடர்ந்து வெயில் அடிப்பதால், காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சூளைகளில் செங்கல் உற்பத்தி துவங்கி உள்ளது.
இதனால், செங்கல் சூளை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உற்பத்தி துவங்கி உள்ளதை தொடர்ந்து, ஒரு செங்கல் எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, கீழம்பியைச் சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி ஆர்.விஜி கூறியதாவது, மழை காரணமாக இரு மாதங்களாக வேலை இல்லாமல் இருந்து வந்தோம்.
தற்போது மழை இல்லாததால், செங்கல் உற்பத்தியை துவக்கி உள்ளோம். ஒரு நாளைக்கு 1,000 செங்கல் உற்பத்தி செய்து, 800 ரூபாய் கூலியாக பெறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்."