நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் திட்டப்பணிகள் துவக்கம்

சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு திட்ட பணிகளை, வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Update: 2024-01-05 14:23 GMT

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2024) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1,335 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 258 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 56 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 78 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவிலும் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 278 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 2 புதிய பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News