எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை
பேராவூரணி அருகே, அட்மா திட்டத்தின் கீழ், 'எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' குறித்த விவசாயிகள் பயிற்சி முகாமில் பல்வேறு வேளாண்மை நுட்பங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, குப்பத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், 'எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' குறித்த விவசாயிகள் பயிற்சி நடந்தது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி பேசுகையில், "எள் எண்ணெய் வித்து பயிர்களின் அரசி என்றழைக்கப்படுகிறது. இது தொடர் பயிருக்கும், கலப்பு பயிருக்கும் மற்றும் தனிப்பயிருக்கும் ஏற்றதாகும். எள் நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினைத் தாங்கி வளரக் கூடிய தன்மையுடையதாகும்.
மேலும், இதனுடைய வேரானது மண் அமைப்பினை மாற்றம் செய்வதனால் நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்கிறது. எள்ளுக்கு நிலவும் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி, எள் உற்பத்திக்கான உயர் விளைச்சல் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் எள் உற்பத்தியை அதிகரிக்கலாம். எள் சாகுபடிக்கு மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்கள் ஏற்றவை நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் அல்லது மூன்று முறை இரும்பு கலப்பையால் அல்லது ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழ வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். நீர் தேங்குவதை தடுக்க நிலத்தை சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுத பின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூட வேண்டும். மக்கிய தொழு உரம் கடைசி உழவிற்கு முன்பு இடவும். டி.எம்.வி 3, 4, 6, கோ 1, வி.ஆர்.ஐ(எஸ்.வி) 1 போன்ற ரகங்களை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத் தூவ வேண்டும். விதைத்த 15 ஆம் நாள் செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளிவிட்டு செடிகளை கலைத்து விட வேண்டும். பின்பு 30 ஆம் நாள் செடிக்கு செடி ஒரு அடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு முறை கலைத்து விடுவது சிறந்தது" என்றார். பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியர் செந்தில்குமார் பேசுகையில், "25 விழுக்காடு தழைச்சத்தானது ஏக்கருக்கு ஒன்றுக்கு அசோஸ்பைரில்லம் 250 கிராம், பாஸ்போ பாக்டீரியா 250 கிராம், அசோபாஸ் 550 கிராம் மூலம் விதை நேர்த்தி செய்யும் போது அசோஸ்பைரில்லம் 800 கிராம், பாஸ்போபாக்டீரியா 800 கிராம் அல்லது அசோபாஸ் 1600 கிராம் மண்ணில் இடுவதன் மூலம் சரி செய்யப்படுகிறது. மண் பரிசோதைனைப் பரிந்துரைப்படி உரமிடுதல் சிறந்தது அல்லது ஏக்கருக்கு யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 8 கிலோ என்ற அளவில் உரமிட வேண்டும். ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனிசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம்.
எள் விதைத்த 3 ஆம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 500 மில்லி லிட்டர் அலாக்குளோர் அல்லது 800 மில்லி லிட்டர் பென்டிமெத்தலின் அல்லது 800 மில்லி லிட்டர் புளுக்குளோரலின் களைக்கொல்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால் களைகளை பெருமளவு கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி தெளிக்காவிட்டால் விதைத்த 15 நாட்கள் கழித்து கைக்களையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும். எள் பயிரில் பூப்பிடிக்காமை பிரச்சைனையை நிவர்த்தி செய்ய விதைத்த 40 வது நாள் ஏக்கருக்கு 150 மில்லி பிளானோபிக்ஸ் 16 பி.பி.எம் மற்றும் 1 சதம் டிஏபி கரைசலை கலந்து மாலை வேளைகளில் தெளிப்பதன் மூலம் 20சதவீதம் மகசூலை அதிகரிக்கலாம். எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவ காலம் ஆகியவற்றை பொருத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதைத்தவுடன் 7 ஆம் நாள் உயிர் தண்ணீர், 25 வது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும், முதிர்ச்சியடையும் போது 2 முறையாக சுமார் 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூ பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதை கவனமாக கடைபிடிக்க வேண்டும்.
இறவை பயிரில் விதைத்த 65 நாட்களுக்குப்பின் நீர் பாய்ச்சக் கூடாது. பூச்சிகளை பொருத்தமட்டில் மிக முக்கியமானது தண்டுபிணைப்பான் மற்றும் காய்பிணைப்பான். இவை தண்டுப் பகுதியினை ஒன்றோடு ஒன்றாக பிணைத்து துவாரமிட்டு சேதப்படுத்தியும் வளர்ந்த பயிர்களில் இளம் காய்களில் துவாரமிட்டு பூ மற்றும் பிஞ்சுகளை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இவைகளை கட்டுப்படுத்திட விதைத்த 25, 35 மற்றும் 50 ஆவது நாட்களுக்கு பிறகு பாசோலோன் 1 லிட்டர் அல்லது கார்பரில் 50 சதவீத தூள் 1 கிலோ இதில் ஏதாவது ஒன்றினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு எக்டர் பரப்பளவில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். மற்றொரு சேதம் விளைவிக்க கூடிய பூச்சிகளில் காவடிப் புழுவும் ஒன்று. இப்புழு 60 மி.மீ நீளமாகவும், கருமை கலந்த பழுப்பு உடலில் செம்புள்ளிகளுடனும் கருப்பு தலையுடன் காவடி போன்று வளைந்து செல்லும். இலைகளை வெகு விரைவாக தின்று அழித்து விடும்
. இதனை கட்டுப்படுத்திட எக்டருக்கு 1 லிட்டர் பெண்தியான் மருந்தினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய்களை பொருத்தமட்டில் வேர் அழுகல் மற்றும் பூவிலை நோயாகும். பூவிலை நோய் தாக்கிய செடிகளை முற்றிலும் பிடுங்கி அழித்து விட வேண்டும். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த விதைக்கும் போதே விதையுடன் டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர் பூசாணக்கொல்லி மருந்தினை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதைக்க வேண்டும். விதைத்து செடி வளர்ந்த பின் இந்நோய் தோன்றினால் 1 சத கார்பன்டாசிம் (1லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் மருந்து) மருந்தினை வேரின் அடிப்பாகத்தில் வேர் நன்றாக நனையும்படி ஊற்ற வேண்டும்.
செடியின் அடி இலைகள் பழுத்து கொட்டிவிடும் மற்றும் செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10 வது காயில் உள்ள விதைகள் கருப்பாக இருந்தால் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த செடியினை வட்ட வடிவில் அடுக்கி 3 நாட்களுக்கு பட்டறை போட வேண்டும். பின்பு செடியினை உலுக்கினால் 70 சதம் விதைகள் கொட்டிவிடும். பின்பு மீண்டும் 1 நாள் வட்ட வடிவமாக வைத்து மீண்டும் விதைகளை பிரித்தல் வேண்டும்" என்றார். இதில், சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன், ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் தமிழழகன், ஜெயக்குமார், தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா, பயிர் அறுவடை பரிசோதனையாளர் அபர்ணா செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் வரவேற்றார்.