தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீடு தேடி சென்று ஓட்டுப்பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2024-04-07 04:21 GMT

தபால் வாக்குகள் பெறும் பணி

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 279 ஓட்டுப்பதிவு மையங்களில், பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதி உள்ளிட்டவைகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு, குறைபாடு உள்ள இடங்களில் குறைகள் உடனே நிவர்த்தி செய்ய ஆலோசனை வழங்கினார்.

Advertisement

இதை தொடர்ந்து தாலுக்கா அளவில் 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், ஓட்டுச்சாவடி வந்து காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி 85 வயதிற்கு மேற்பட்டோர் 292 பேர், மாற்றுத்திறனாளிகள் 218 பேர் என, மொத்தம் 508 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் வீடுகளுக்கு நேரிடையாக அதிகாரிகள் சென்று, விண்ணப்பித்த நபர்களிடம் ஓட்டுப்பதிவு பெறும் பணி துவங்கியது.

நேற்று இதன்படி 85 வயதிற்கு மேற்பட்டோர் 239 பேர், மாற்றுத்திறனாளிகள் 168 பேர், ஆக மொத்தம் 407 பேரிடம் ஓட்டுப்பதிவு பெற்றனர். ஓட்டுப்பதிவு பெற்ற பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்காளர் வசம் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News