கூடுதல் வட்டி கேட்டு மிரட்டல் - ஆட்சியரிடம் புகார்
சேலத்தில் வீட்டை அடமானம் வைத்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 50). கெமிக்கல் தொழில் செய்து வரும் இவர், நேற்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நெத்திமேட்டில் உள்ள 800 சதுர அடி வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.8 லட்சம் கடன் வாங்கினேன்.
அதற்கு மாதம் ரூ.40 ஆயிரம் வட்டி கொடுக்க ஒப்புகொண்டேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சரியாக வட்டி கொடுக்க முடியவில்லை. ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். தற்போது நான் ரூ.12 லட்சம் வட்டியுடன் தருகிறேன். எனது வீட்டை தருமாறு அவரிடம் கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து கந்துவட்டி கணக்குப்படி ரூ.33 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். இதனால் குடும்பத்தினருடன் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, எனது வீட்டை மீட்டுத்தருவதோடு கந்துவட்டி கேட்டு மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.