தென்னை சார் தொழிலாளர்களுக்கு கேரா சுரக்சா காப்பீடு திட்டம் அறிமுகம் 

ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்னை சார் தொழிலாளர்களுக்கான கேரா சுரக்சா காப்பீடு திட்டம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2024-01-24 08:04 GMT

ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னை விவசாயிகள் நலக்குழு உடன் இணைந்து, தென்னை மரமேறும் தொழிலாளிகளுக்கான காப்பீட்டு திட்டம் தொடர்பான வட்டார அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில்நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் எம்.சுருளிராஜன் கலந்து கொண்டு தலைமை வகித்து, தென்னையை தாக்கும் நோய்கள், பூச்சி தாக்குதல், கட்டுப்படுத்தும் வழிமுறைகள், அதிக விளைச்சல் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.  தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் ப.முருகானந்தம் முன்னிலை வகித்துப் பேசுகையில்,  "ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து பயனாளிகள் 25 விழுக்காடு தொகையாக ரூபாய் 94, வாரியம் 75 விழுக்காடு தொகையாக ரூபாய் 281 செலுத்தி, ஆண்டு பிரிமீயமாக ரூ.375 கட்டணத்தில் பிரத்தியேகமாக, தென்னை சார் தொழிலாளர்களுக்கான, 'கேரா சுரக்சா இன்சூரன்ஸ்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால், ரூபாய் 5 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும். மேலும், உடல் ஊனம் அடைந்தால் ரூபாய் 2.5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் ஒரு லட்சம் வரை வழங்கப்படும். மேலும், மருத்துவ சிகிச்சை காலத்தில் வாரம் ஒன்றுக்கு ரூபாய் 3,000 வீதம், 6 வாரத்திற்கு குடும்ப வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படும்" என தெரிவித்தார். தென்னை விவசாயிகள் நலக் குழு தலைவர் ஆர்.எஸ்.வேலுச்சாமி (குருவிக்கரம்பை), டி.சந்திரமோகன் (ஆண்டிக்காடு), சரவணமுத்து (பேராவூரணி-பெருமகளூர்) ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.  இதில், தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள், தென்னை மரத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 150 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 100 க்கும் மேற்பட்டோருக்கு உரிய ஆவணங்களை பெற்று காப்பீட்டு திட்டத்திற்காக பதிவு மேற்கொள்ளப்பட்டது. நிறைவாக தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர் பார்வதி பிரியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News