திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகி கைது !
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.80 லட்சம் அலுமினியம் திருடிய தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-06 07:36 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில், அலுமினிய தொழிற்சாலை உள்ளது. இதன், கிடங்கு நெமிலி மற்றும் வல்லம் பகுதியில் உள்ளன. சில நாட்களாக, நெமிலியில் உள்ள கிடங்கில் 'சிசிடிவி' கேமராக்கள் இயங்கவில்லை. இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினியப் பொருட்கள் மாயமாகி இருந்தன. இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், கிடங்கின் காவலாளிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், கிடங்கில் ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டி வந்த சந்தவேலுார் பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீபெரும்புதுார் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர் பழனி, 40, காவலாளி மேலாளர் ரவிரஞ்சன், காவலாளி அசாமைச் சந்தோஷ்குமார் சஹானி, 24, ஆகியோர் இணைந்து, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான அலுமினியப் பொருட்களை, இரண்டு லாரிகளில் திருடி சென்று விற்றது தெரிந்தது. பழனி மற்றும் சந்தோஷ்குமார் சஹானி, 24, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்து, 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள காவலாளி மேலாளர் ரவிரஞ்சனை, போலீசார் தேடி வருகின்றனர்."