தொடரும் மண் கொள்ளை , அதிகாரிகளின் துாக்கம் கலையுமா?
பேரிஞ்சம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நடைபெறும் தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கிராவல் மண் திருடப்பட்டு வருகிறது.
ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக, 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி எடுக்கப்படும் கிராவல் மண், லாரிகள் வாயிலாக எடுத்து செல்லப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக, ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள வனப்பகுதிகளில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு மண் திருடப்பட்டுள்ளதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்பகுதியின் முக்கிய அரசியல் புள்ளி உதவியுடன்நடக்கும் இந்த மண் கொள்ளை, அப்பகுதி மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக, ஏரியின் அருகில் உள்ள வனப்பகுதியில், 500க்கும் அதிகமான மரங்களை வெட்டியுள்ளனர். இதுவரை, 50,000த்திற்கும் மேற்பட்ட லாரிகளில் மண் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதனால், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தொடர்ந்து நடக்கும் இந்த மண் கொள்ளை குறித்து, வருவாய் துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மண் திருட்டில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.