அரசியல் சட்டத்தை காப்பாற்றும் பொறுப்பு ஸ்டாலினுடையது-ஆ.ராசா
இந்தியாவின் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருப்பதாக ஆ.ராசா கூடலூரில் பேசினார்.
இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க., சார்பாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.ராசா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் ஒன்றிய கழகம் சார்பாக ஆ.ராசாவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆ.ராசா உரையாற்றினார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா பேசுகையில், " எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை விட்டு போகும் போது ரூ. 5 லட்சம் கடனை வைத்து சென்றார். அந்த நேரத்தில் பதவியேற்ற முதல்வர் ஒரு பக்கம் கொரோனா, ஒரு பக்கம் வெள்ள பாதிப்பு, ஒரு பக்கம் 5 லட்சம் கோடி கடன் போன்றவற்றை எல்லாம் சமாளித்து, கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் திறம்பட செயலாற்றினார்.
பா.ஜ.க., வில் மோடி ஆட்சி செய்த குஜராத்தில் நூற்றுக்கு 24 பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். ராமர் கோவில் கட்டிய உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கு 35 பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர். ஆனால் திராவிட ஆட்சியால் தமிழகத்தில் நூற்றுக்கு பத்து பேர் மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். நமது முதல்வருக்கு தமிழ் மொழி மட்டுமல்ல தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே காப்பாற்றும் பொறுப்பு உள்ளது. குறிப்பாக இந்த தேசத்தை காப்பாற்றும் முயற்சியில் பண பலம் படைத்த வட மாநில தலைவர்கள் வர மறுக்கிறார்கள் காரணம் அமலாக்கத்துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., இதற்கெல்லாம் பயப்படாத ஒரே தலைவன் ஸ்டாலின் மட்டுமே. இந்தியாவில் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்ற மகத்தான பொறுப்பு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு இருக்கிறது . முதலமைச்சரின் செயலைக் கண்டு டெல்லி வியந்து போய் நிற்கிறது . இவ்வாறு அவர் பேசினார்.