கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சாலை மறியல்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 203 பேரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-31 08:15 GMT
கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் நடந்தது. மறியலுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மகாலிங்கம், அண்ணாதுரை, அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரஹீம், வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு தொகையை வழங்குதல், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 11.30 மணியளவில் சாலைமறியல் நடந்தது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 203 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.