ஜல்லி சாலை - டிரான்ஸ்பார்மரில் மோதிய பள்ளி பஸ்

Update: 2023-12-15 03:24 GMT

விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலையிலிருந்து காஞ்சி செல்லும் ரோட்டில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சரஸ்வதி வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை அந்த பள்ளியின் பஸ் கிராமங்களுக்கு சென்று மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. 30 மாணவர்கள் பஸ்சில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

காஞ்சி அடுத்த அரிதாரிமங்கலம் கிராமத்தில் சென்றபோது சாலையோரம் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி பஸ் திடீரென நிலை தடுமாறி மோதியது. இதனால் பஸ் குலுங்கிய அதிர்ச்சியில் பஸ்சில் இருந்த மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு வேறு பஸ்சில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்தை கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் அந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தனது மகனை பார்த்து தாய் ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார். மின்சாரத்துறையினர் உடனடியாக வந்து மின் இணைப்புகளை துண்டித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

விபத்து நடந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை எடுத்த திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் ஜல்லி கொட்டி விட்டு தார் போடாமல் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. பல மாதங்களாக இதே நிலை உள்ளதாகவும், இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜல்லி ரோட்டில் சென்ற பள்ளி பஸ் சறுக்கி டிரான்ஸ்பார்மர் மீது மோதியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலை பணியை சரிவர முடிக்காத ஒப்பந்ததாரர் மீதும், இதை கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

Similar News