பைக்கில் சென்ற தம்பதியிடம் நகை பறிப்பு

நெல்லை அருகே பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 3.5 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-27 07:40 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே சென்னல்பட்டியைச் சோ்ந்தவர் மாரியப்பன் (52). இவர் நேற்று மதியம் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரியுடன் (48) பைக்கில் கங்கைகொண்டான்- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். மான் பூங்கா அருகில் சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று மாரியப்பனின் மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முயன்றனர்.

அப்போது மர்மநபர்களில் ஒருவர் திடீரென்று ராஜேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பிடித்து இழுத்து பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட ராஜேஸ்வரி கையால் தங்கச்சங்கிலியை இறுக பிடித்து கொண்டார். எனினும் தங்கச்சங்கிலியை மர்மநபர் வேகமாக பிடித்து இழுத்ததால் இரண்டாக அறுந்தது. ராஜேஸ்வரியின் கையில் 1½ பவுன் சங்கிலியும், மர்மநபரின் கையில் 3½ பவுன் சங்கிலியும் இருந்தது. அறுந்த நகையுடன் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதற்கிடையே, மர்மநபர்கள் நகை பறித்து சென்றதில், தம்பதி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் மாரியப்பன், ராேஜசுவரி ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.

அவர்களின் தலை, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த தம்பதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியிடம் மர்மநபர்கள் நகை பறித்ததில், தம்பதி தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News