ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் 25- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் 1,664 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்துப் பேசியது: மாணவர்கள் தொலைநோக்குப் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சமதர்மம், மனிதநேயம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளும்போது மாணவர்களின் கனவு மெய்ப்படுகிறது. மாணவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமையை வெளிக்காட்டி வெற்றி பெற வேண்டும். வேலை தேடுவதற்குரிய தகுதியைப் பெற்றிருப்பதைவிட வேலை கொடுப்பதற்குரிய தகுதியை ஒவ்வொரு மாணவரும் பெற்றிருக்க வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவோரில் 65% பேர் பெண்களாக உள்ளனர். அந்தபெண்கள் முன்னேறியுள்ளனர். கல்விக்காக அரசு அளிக்கும் உதவித்தொகை, வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார் அவர். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் பட்டம் பெற்றோரில் 22 பேர் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும் மாணவ, மாணவிகள் அருள் ரோஷினி, ஆ. சுபராகவி, மு சிவசுப்ரமணியன், சுகன்ய ஆகியோர் சிறந்தமாணவர்களுக்கான ரூ.5 ஆயிரம் பரிசு, விருது பெற்றனர். கல்லூரியின் அறங்காவலர் கவிதா சுப்ரமணியன் வரவேற்றார்.