கள்ளக்குறிச்சி : 1,778 தபால் வாக்குகள் பதிவு
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 1,778 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து தபால் ஓட்டுக்கள் சேகரிக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை பெறுவதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தலின்போது, ஓட்டுச்சாவடி மையத்திற்கு வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் ஓட்டளிக்கலாம் என அறிவுறுத்தியது. அதன்படி, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரத்து 199 முதிய வாக்காளர்கள், 16 ஆயிரத்து 103 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். இதில், வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்த நபர்களுக்கு படிவம் 12-டி வழங்கப்பட்ட நிலையில், தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணி கடந்த 8ம் தேதி தொடங்கியது. தபால் ஓட்டுக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெறுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களது தபால் ஓட்டினை 'சீல்' வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டியில் சேகரித்தனர். அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் 861 மூத்த வாக்காளர்கள், 917 மாற்றுத்திறனாளிகள் என 1,778 தபால் ஓட்டுக்கள் சேகரிக்கப்பட்டது.