காமநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
காமநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம் திருவீதி உலா நடந்தது.
Update: 2024-03-25 16:54 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் கிராமத்தில் காமநாதீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து காமநாதீஸ்வரர் திருக்கல்யாணம், இரவு சாமி திருவீதி உலா நடந்தது. கரிவரதராஜ பெருமாள் சாமி திருக்கல்யாணம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காமநாதீஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை சாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தை யொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர் வலமாக வந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.