காஞ்சி வைகுண்ட பெருமாளுக்கு வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரம்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். இதில், மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகன உற்சவமும், ஏழாம் நாள் நேற்று முன்தினம் காலை தேரோட்டமும் விமரிசையாக நடந்தது.
இதில்,எட்டாம் நாள் உற்சவமான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு குதிரை வாகன உற்சவம் நடந்தது. இன்று காலை பல்லக்கும், தொடர்ந்து தீர்த்தவாரியும், இரவு முகுந்த விமான உற்சவமும், நாளை காலை சாந்தி திருமஞ்சனம் மற்றும் சப்தாரவணத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.