காஞ்சிபுரம் : 14 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளுக்கு உட்பட்ட 14 ஊராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த ஊராட்சிகள் உட்பட, சென்னையின் 200 வார்டுகள், 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-05-15 03:06 GMT

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை உடைய 10 மண்டலமாக செயல்பட்டது. நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், 2011ல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. 200 வார்டுகள் அதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் உடைய மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விரிவாக்க மாநகராட்சியில் உள்ள வருவாய்த் துறை எல்லைகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள், சென்னை மாவட்டத்தில் சேர்ந்தன. தொடர்ந்து, புறநகரில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்த்து, தாம்பரம் மற்றும் ஆவடி தனி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி எல்லையில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதியை அடிப்படையாக வைத்து, மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டன. சோழிங்கநல்லுார் தொகுதியில், இரண்டு மண்டலங்கள் உள்ளன.

இதேபோல் மற்ற தொகுதிகளையும் கணக்கிட்டு, தற்போதுள்ள 15 மண்டலங்களை 23 மண்டலங்களாகப் பிரித்து, கடந்த ஆண்டு, ஏப்., மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், ஒரே தொகுதியில் இரு மண்டல தலைவர்கள், நிர்வாகக் குளறுபடி, நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், மண்டலங்கள் பிரிப்பதற்கான இறுதி வரையறை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News