விவசாயியின் உடல் உறுப்புகள் தானம் - அரசு சார்பில் மரியாதை
நத்தக்காடையூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 58 விவசாயி ஆவார். இவர் கடந்த 12ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிள் சென்று போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இது பற்றி மருத்துவமனை மருத்துவர்கள் செல்வகுமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சில உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்டம் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வகுமாரின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.
காங்கேயம் வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வக்குமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும் கல்பனா தேவி என்ற மகளும் உள்ளனர்.