கரிசல் இலக்கிய விழா

சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில்,கரிசல் இலக்கிய கழகம் சார்பில் கரிசல் இலக்கிய ஆய்வு கோவை, கரிசல் நிலவியல் கதைகள் மற்றும் கரிசல் இலக்கிய மலர், புத்தகங்கள் அறிமுக விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-15 06:11 GMT

கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கரிசல் இலக்கியத் திருவிழா 08.12.2023 மற்றும் 09.12.2023 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, மாணவர்கள், பொதுமக்கள், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கரிசல் இலக்கியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் “கரிசல் இலக்கிய கழகம்” புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்படி, கரிசல் இலக்கிய கழகத்தின் சார்பாக கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்காகவும், கரிசல் இலக்கிய பண்பாட்டையும், படைப்புகளையும் மாணவர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் வகையில், கரிசல் இலக்கிய ஆய்வு கோவை, கரிசல் நிலவியல் கதைகள் மற்றும் கரிசல் இலக்கிய மலர், புத்தகங்கள் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு சிறு நாவல் ஏற்படுத்திய தாக்கத்தினால் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஒரு சிறு கவிதை இரண்டு மூன்று நாட்களாக நீங்கள் இருக்கக்கூடிய மன இறுக்கத்தில் இருந்து அல்லது தாழ்வாக நினைக்கக்கூடிய ஒரு மன நிலையில் இருந்து, எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உத்வேகப் படுத்துவதற்கான வாய்ப்பை தரும். இதெல்லாம் ஒரு பிரச்சனையா, இதெல்லாம் ஒரு இழப்பா, இந்த இழப்பை தாண்டி நான் வாழ்ந்து காட்ட வேண்டும.; இந்த இழப்பை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்ற வாய்ப்பை ஒரு கதை உருவாக்கும். அதுவும் நம் மண்ணை ஒட்டி நம்மோடு வாழக்கூடிய நமக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை புரிந்து கொள்வது என்பது அடுத்த காலகட்டத்திற்கு அவர்கள் அனுபவங்களோடு நாம் நகர்ந்து செல்வதற்கும், இன்னும் பல உயரங்களை தொடுவதற்கும், பல வலிகளை தாங்குவதற்கும், வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் வாய்ப்பாக நமக்கு ஒரு நண்பனாக அமைவது தான் இந்த இலக்கியம்.

இன்று மாணவர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நமக்கு பொழுது போக்குவதற்கும், கற்றுக் கொள்வதற்கும், நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிப்பதற்கும் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றது. புத்தகத்தின் மீது மாணவர்களின் கவனம் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றது. அவர்களுக்கு முறையாக ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தில் தான் இந்த விழா நடைபெறுகிறது. இந்த மண்ணில் மிக தரமிக்க எழுத்தாளர்கள் வாழ்ந்தார்கள். உலக தரத்திலான சிறுகதைகள் என்று சொல்லக்கூடிய் நமது மண்ணின் கதைகள், இந்த மண்ணின் வழியே, இந்த மக்களின் வாழ்க்கையை, இந்த மண்ணின் பண்பாட்டை முழுவதுமாக இரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ளன.

காத்திரமான உலகத்தரம் மிக்க எழுத்துக்களை எழுதியவர்கள் பெரும்பாலும் பள்ளி படிப்பை முடிக்காதவர்கள் தான். கீ.ராவும், கு.அழகிரிசாமி ஆகியோர்களது கதைகளை எல்லாம் படிக்கின்ற போது அந்த காலகட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள், எப்படி அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் எழுதி இருப்பார்கள். நமக்கு ஒரு கல்லூரி படிப்பை படிப்பதற்கும், போட்டித் தேர்வை எழுதுவதற்கும், நோயை குணப்படுத்துவதற்கும் வழிகாட்டி தேவைப்படுகிறார்கள். அதுபோல இந்த கரிசல் இலக்கியத்தை எழுதியவர்களின் கல்விப் பின்புலவும், அவர்கள் இந்த சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையும், எல்லாவற்றையும் விட வாழ்க்கை சிக்கல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினைகளாக எடுத்துக் கூறுகின்றன. நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அல்லது மற்றவர்களோடு முழுமையாக பகிர்ந்து கொண்டு முழுமையான விடையை தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கின்றபோது நமக்கு எப்போதும் உற்றத்துணையாக இருப்பது, நம்மோடு வாழ்ந்த மக்களின் அனுபவங்கள் தான். அந்த அனுபவங்களை எழுத்து வடிவில் கொண்டு வருவது தான் இலக்கியம்.

நம் கரிசல் மண்ணில் இருக்கக்கூடிய படைப்புகள் என்பது ஒரு ஆயிரம் ஆண்டுகளாக கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த மண்ணில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, பஞ்சம், பாலின சிக்கல்கள், பாலின வேறுபாடு, சமத்துவம், கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் எவ்வளவு முக்கியமான இடத்தில் நாம் வந்தடைந்திருக்கிறோம் என்பது குறித்து மிகத் தெளிவாக சொல்லுகிறது. மாணவர்களுக்காக கரிசல் இலக்கிய கதைகள் தொகுப்பு, சமகாலகட்டத்தில் சிறந்த படைப்பாளர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இலக்கிய மலர், ஆய்வு மாணவர்கள், தமிழ் இலக்கிய மாணவர்கள் மட்டுமல்லாது எல்லோராலும் படித்து இலக்கியத்தை எந்த பார்வையில் பார்க்க வேண்டும் என்ற இலக்கிய ஆய்வு கோவை என மொத்தம் மூன்று புத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள்; வாழ்க்கை முழுவதும் பின்காலத்தில் எந்த பணிகளில் இருந்தாலும்; இலக்கியங்களோடும், கதைகளோடும் எப்போதும் தொடர்பு வைத்துக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு உற்ற நண்பர் உங்களது வாழ்க்கை முழுவதும் எப்போதும் உங்களை ஏமாற்றாத உங்களுக்கு வஞ்சகம் இளைக்காத வழிகாட்டியாக இருக்கக்கூடிய நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பது தான் பொருள். அதை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

Tags:    

Similar News