கார்த்திகை தீபத் திருவிழா: முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.நகராட்சி கூடுதல் இயக்குனர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார்.கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
தற்காலிக பஸ் நிலையங்களில் போதிய அளவிற்கு மின்விளக்கு வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்படும்.கிரிவலப்பாதையில் நகராட்சி சார்பில் கூடுதல் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படும். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க திருவண்ணாமலை நகராட்சி மட்டுமின்றி பிற நகராட்சிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தூய்மை பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகளை தூய்மை காவலர்கள் மூலம் உடனுக்குடன் அகற்றி குப்பை தொட்டியில் சேகரிக்கப்படும். குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் வாகனங்கள் மூலம் குப்பைகளை சேகரிக்கும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பக்தர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி டேங்கர் லாரிகளில் குடிநீர் தயார் நிலையில் வைக்கப்படும் என நகராட்சி கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.